மூச்சினால் முத்தமிட்டவள்..!
உயிரின் மொழியில் கவிதை
உனக்கென எழுதும் பொழுதில்
பயிரிளம் வேரில் எல்லாம்
பைந்தமிழ் பாக்கள் பூக்கும்
குயிலினை மிஞ்சும் குரலில்
குழவியாய் பேசும் எழிலில்
பயின்றிட வாழ்வும் இனிக்கும்
பாவையுன் பார்வை வரைக்கும்
முத்தத்தில் ஈரம் இன்றி
மூச்சினை தந்தாய் நன்றி
ரத்தத்தில் அதுவே கூடி
ரணங்களை அழித்தது கோடி
புத்தியில் என்னை வளர்க்கப்
புன்னகை தினமும் பூத்தாய்
நித்தியம் வருவேன் உந்தன்
நினைவுகள் தேடித் தேடி
மலைகளில் மேகம் மோதி
மழலையாய் சிந்தும் கண்ணீர்
சோலைகள் நழுவும் பூவை
சொந்தமாய் அள்ளிச் சேர்க்கும்
அலைகடல் திலகம் இன்றி
அமைதியாய் வெறுமை காக்க
விலையிலா விண்மீன் நீயேன்
விலகினாய் வானம் விட்டு
மறைபோல் உந்தன் அன்பை
மறந்திடா பாவி எந்தன்
நிறையாத குடமாய் கண்ணை
நீங்கிடும் துளிகள் சொல்லும்
இறையினை தேடும் இவனின்
இதயத்தின் சுவரில் எல்லாம்
பிறைநிலா உனது விம்பம்
பிழையின்றி வரைந்தான் என்று
தேற்றங்கள் இல்லாக் கணிதம்
தேறாத விடையை காட்டும்
சீற்றங்கள் கொள்ளும் ஜோடி
சிதறிடும் பிரிவை தேடி
மாற்றங்கள் தேடும் மனதில்
மானிடர் காதல் தன்னில்
ஊற்றுக்கண் உணர்வே அன்றி
உலகத்தில் ஏதும் இல்லை
No comments:
Post a Comment