முக்தனின் முழக்கம்
அடிபட்டுக் காயம் அடைந்த ஒரு நாகம்
படத்தை விரித் தெழும்பும்; பக்குவமாய்த் தூண்டிவிட்ட
தீக்கொழுந்து நன்றாய்த் திகழ்ந்தெரியும்; உயிர்த்தலத்தில்
தாக்குண்டு பொங்கியெழும் சிங்கத்தின் சப்தத்தைப்
பாலைநிலக் காற்றுப் பரவ எதிரொலிக்கும்.
வாள் வீச்சுக் காட்டி வருகின்ற மின்னலினால்
நீள்மேகம் பிளவுபட நேருங்கால் கிளர்ந்தூதி
வெள்ளத்தை வெளியாட விட்டுவிடும்! ஆன்மாவின்
உள்ளுக்குள் ஆழ்த்தில் உசுப்பிக் கலக்குகையில்
கொள்ளைநலம் மேலோரால் குவிந்துவரப் பெற்றிடுமே!
இருவழிகள் மங்கட்டும்! இதயம் மயங்கட்டும்!
அருநட்பும் மறையட்டும்! அன்புவஞ் சிக்கட்டும்!
விதி, நூறு பயங்கரங்கள் மேவிவரச் செய்ட்டும்!
அதிக இருள் வழியதனை அடைத்துத்தான் பார்க்கட்டும்!
சினத்தோ டியற்கைஉனைச் சிதைக்க முயன்றாலும்
உனைத்தெரிக ஆன்மாவே! உயர்தெய்வம் நீயேதான்!
இடமென்றும் வலமென்றும் எண்ணாமல் மென்மேலே
நடைபோடு குறிக்கோளை நண்ணிப் பெறும்வரையில்!
தேவனிலை; மனிதனிலை சிறப்பறியா விலங்குமிலை
மேவுஉடல் மனமுமிலை விளங்கிடும்ஆண் பெண்ணுமிலை
என்னியல்பு கூறவந்த ஏடனைத்தும் வியப்பாலே
நின்றுவிடும் ஊமைகளாய் நீ யுணர்க; நான் கடவுள்!
வானக் கதிருக்கும் வண்ணமுறு திங்களுக்கும்
ஆன நிலத்துக்கும் ஆகாய மீன்களுக்கும்
சுற்றிவரும் கோள்களுக்கும் தொடர்காலச் சுழற்சிக்கும்
முற்பட்டு நின்றேன் நான்; நிற்கின்றேன்; நிற்பேனே!
பொங்கும் அழகுடைய பூதலத்தை, புகழ்க்கதிரை
தங்குமொளி இன் அமைதித் தண்மதியை, வானகத்தை
ஊழ் இயக்கி ஓடவிடும்; ஓர்பிணைப்பில் அவையனைத்தும்
வாழும், பின் அப்பிணைப்பில் வாழ்வைஇழந் தொழியும்
கருத்ததனின் போர்வையினைக் கனவு வலையதனை
விரித்துப் பொருத்தி விரைவாய்ப் பிடித்தபடி
விண், மண்ணோ(டு) இன்ப துன்பம் வேண்டாத பாழ்நரகை
எண்ணத் தறியதனில் இட்டுப் பிணைத்துவிடும்
காரியமும் காரணமும் காலத்தோ டிடமதுவும்
பாரில்வெளித் தோற்ற மெனப் படர்பவைதாம், நீயறிக!
அறிவுக்கும் நினைவுக்கும் அப்பாலுக் கப்பாலாய்
உறைகின்ற சான்றாக உலகத்தில் உள்ளேன் யான்!
இரண்டல்ல, பலவல்ல, எல்லாமிங் கொன்றேதான்
திரண் டெல்லாம் என்பால் திகழ்ந்திருக்கும்; எனை நானே
இகழ்வதுவும் வெறுப்பதுவும் இயன்றிடுமா? ஆனால்என்
அகம்நிறைய எப்பொழுதும் அன்பே குடியிருக்கும்
கனவு கலைந்தெழுக! கட்டை அவிழ்த் தெறிக!
மனத்தில் எழும் அச்சத்தை மறந்திடுக! என்நிழலே
எனை மருட்டக் கூடுவதோ? இந்த ரகசியத்தை
உணர்ந்திடுக நன்றாக! உரைக்கின் றேன் அவன்நானே!
No comments:
Post a Comment