என் நாடகம் முடிந்தது!
ஒழுகித் தணியும் உயிர்ப்போடே
உளதாம் இலதாம் காட்சிகளில்
எழுகிறேன், வீழ்கிறேன்; கால அலை
இடையே உருண்டு நான்செல்கிறேன்
தொலைவில் எல்லைக் கோடதனை
தொட முடியாத ஒரு
நிலையில் லாமல் எந்தெந்த
நேரம் எனினும் ஓடுகிற
முடிவில்லாத விளையாட்டில்
முற்றும் சலித்துப் போய்விட்டேன்!
பிடியா அந்தக் கூத்தாலே
பெரிதாய் மகிழ்ச்சி கிடையாது!
ஒவ்வொரு பிறவி யதிலும்நான்
உரிய வாசலில் காத்திருப்பேன்!
அவ்வா சல்தன் திருக்கதவம்
ஐயோ! என்றும் திறப்பதிலை!
நிறையும் ஒளியின் கதிர்ஒன்றை
நெடுநாள் பிடிக்க முயன்றாலும்
ஒருபயன் இன்றி என்கண்கள்
ஒளியது குன்றி மங்கியவே!
அற்ப வாழ்வின் உச்சத்தில்
அகலம் குறைந்த பாலத்தில்,
நற்பட நின்று கீழ்நோக்கி
நானில மதனில் நான்பார்த்தேன்.
அழுது சிரித்துப் போராடும்
அந்த மனிதக் கும்பலினை!
தழுவிய அன்பும் ஏன்எனவே
தரணியில் யாரோ அறிந்திடுவார்!
அதோ அங்கே தெரிகின்ற
அந்த வாசல் முன்நின்றே
இதோ இதனை நான் சொன்னேன்
இனிமேல் வழியே உனக்கில்லை
இதுவே எல்லை. மென்மேலே
ஏகுவ தற்கு முன்நின்றே
விதியே! நலமாய் நீஎண்ணி
மேலாம் பொறுமை கொள்வாயே
செல்வாய்! அவருடன் சேர்ந்திடுவாய்!
செகவாழ் வதனை நுகர்ந்திடுவாய்!
நல்லுணர் விழந்தே அவர்போல
நாளும் பைத்திய மாய்வாழ்வாய்
அறிய முயலும் ஒருமனிதன்
ஆழத் துயர்தான் அடைந்திடுவான்!
நிறுத்துக; பின்னர் அவரோடு
நிதமும் தங்கி இருப்பாயே!
நீரிற் குமிழி போல்மிதக்கும்
நிலத்தில் அமைதி எனக்கில்லை!
சீர்இல் வெறுமை உரு, நாமம்
சென்மம், இறப்பொரு பொருட்டில்லை
புறத்தே அமையும் உருவுக்கும்
பொலியும் பெயர்க்கும் அப்பாலே
விரைந்து செல்ல உள்ளத்தில்
விருப்பம் எத்தனை கொண்டிருந்தேன்!
ஆஆ! வாசல் கதவங்கள்
அடைத்தி ராமல் திருந்துவிடு!
ஆமாம் எனக்கு நிச்சமாய்
அவைகள் திறக்கப் படவேண்டும்!
தாயே, நினது தளர்வுற்ற
தனயன் எனக்குத் தயவோடு
நீயே அந்த ஒளிக்கதவம்
நேராய் வந்து திறந்துவிடு!
என்விளை யாட்டு முடிந்ததம்மா!
இன்ப வீட்டை மறுபடியும்
நன்றே அடைய வேண்டுமென
நாடுகின் றேன்நான் என்நெஞ்சில்!
அச்சம் அளிக்கும் முகமூடி
அணிந்த வண்ணம், எனைநீயோர்
உச்ச இருளில் வெளியேற்றி
ஓடி ஆடச் செய்தாயே!
ஆதலினால்தான் நம்பிக்கை
அழிந்தது பயமும் பெருகியது!
காதலி னால்உறும் விளையாட்டுக்
கடும்வினை யாக மாறியது!
ஆர்வமும் ஆழ்ந்த கவலைகளும்
அதிகம் குமுறிக் கொந்தளிக்கும்
பேரா ழியினில் இங்குமங்கும்
பெரிதாய் எனைநீ அலைக்கழித்தாய்!
அங்கே துயரம் தான்கண்டேன்!
அப்பால் ஒருநாள் எப்படியும்
பொங்கும் மகிழ்வும் இன்பமதும்
பூரிப் புடனே வந்தடையும்!
இறப்பே துயரும் இன்பமதும்
இணைந்த வாழ்க்கைச் சக்கரத்தை
மறுபடி சுற்ற வந்ததென
மானுட ரிங்கே யாரறிவார்?
இறப்பே பின்னால் வரப்போகும்
இன்னொரு பிறவி யதன்தொடக்கம்!
இறப்பென் பதுவே வாழ்க்கையதன்
இன்னொரு தோற்றம் உண்மையிலே!
விரைவில் தூளாய் வீழ்ந்துதிர
மோதினி மதலையர், வாழ்வதனை
அருமையாய்க் காண்பார் பொற்கனவாய்!
அழகு நிறைந்த ஒளிக்கனவாய்!
இன்றிங் குள்ள உயிர்வாழ்க்கை
எதற்கும் உதவாத் துருப்படலம்
முன்னம் இழந்த நம்பிக்கை
முன்வந் துறுமோ எனப்பார்ப்பார்.
கடந்த கால உருளையிடை
கவினார் அறிவை முழுமையது
அடைந்திடல் என்பது முடியாது!
அதற்கோ நேரமும் கிடையாது
அந்த உருளையில் இளைஞர்களின்
ஆற்றல் பொருத்தி வருங்காலை
முந்தும் நாளும் ஆண்டாண்டும்!
மோக மயக்கின் பொம்மையானது!
பொய்நம் பிக்கை அதன் விசையாம்!
பூக்கும் ஆசை அச்சிட மாம்!
நைய அழுத்தும் துன்பமுடன்
நன்மகிழ் வதுவும் அரைகளாம்!
அலைக்கழிந் தாடிப் போகின்றேன்
ஆனால் எங்கென யானறியேன்!
கலக்கிடும் அந்தக் கனல் தவிர்த்துக்
காப்பாற் றிடுவாய் எனையம்மா!
ஆசைக் கடலில் மிதக்குமெனை
அருள்கூர்ந் தம்மா கரைசேர்ப்பாய்!
நேசம் மறந்து பயமூட்டும்
நின்றன் முகத்தைக் காட்டாதே!
அதனைத் தாங்க ஒண்ணேன் நான்!
அன்பும் கருணையும் என்றன்பால்
நிதமும் காட்டிக் கண்டித்து
நேர்ந்த பிழைகளைப் பொறுத்துக்கொள்!
நிரந்தர மாகப் பூசல்எலாம்
நீங்கி மறைந்த கரைநோக்கி
வரம்தரு தாயே என்னைநீ
வாவெனக் கூட்டி அழைத்துச்செல்!
கண்ணீர்த் துளிகள் காணாத
கவலைகள் ஏதும் சேராத
மண்ணுல கின்பமும் இல்லாத
வகையினில் ஓரிடம் கூட்டிப்போ!
நின்புகழ் அந்தக் கதிருடனே
நீல வான முழுமதியும்
மின்னும் தாரகைக் கணங்களுடன்
மின்னுலும் சேர்ந்து வெளிப்படுத்தா
தாமே ஒளியை அவைதாரா!
தாய்உன் ஒளியை வாங்கிவிடும்!
ஆம், இனி மாயக் கனவுன்றன்
அருள்முகம் மறைக்க விடமாட்டேன்!
என்விளை யாட்டு முடிந்ததம்மா!
என்னைப் பிணித்த விலங்குகளை
இன்னே உடைத்துச் சிதறியடி!
எனக்குச் சுதந்திரம் தந்துவிடு!
No comments:
Post a Comment