Search This Blog

Sunday, 12 January 2014

தை திருநாள்...

தை திருநாள்...

தை முதல் நாளை பொங்கல் விழாவாக நாம் அனைவரும் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறோம். தீபாவளி என்பது நரகாசுரனை கிருஷ்ணர் அழித்ததை நினைவு கூறும் விதமாக, ஒரு தீயவன் அழிந்த மகிழ்ச்சியில் கொண்டாடுகிறோம். அதே போல பொங்கலை எந்த காரணத்திற்காக கொண்டாடுகிறோம் என கேட்டால், நமக்கு உணவு அளிக்கும் இயற்கையை பாராட்டும் விதமாக, நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுகிறோம் என நாம் அனைவரும் சரியாக சொல்லி விடுவோம். ஆனால் வருடத்தின் 365 நாட்களில் எதனால் தை முதல் நாளில் இந்த விழா? விட்டத்தை வெறித்துக் கொண்டு யோசிக்கும் போது இப்படி ஒரு கேள்வி மனதில் எழுந்தது. விடை காணும் விதமாக விட்டத்தை விட்டு விலகி வேறு பக்கம் பார்த்து யோசிக்கத் தொடங்கினேன். அப்போது தான் ஒரு விஷயம் புலப் பட்டது.

நம்மை சுற்றி நான்கு திசைகள் இருந்தாலும், நாம் திசைகளை நான்கென பகுத்து வைத்திருந்தாலும், உண்மையில் பிரபஞ்சம் கோள வடிவிலானது(!). இதில் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டப் பாதையில் நியதிக்குட்பட்டு இயங்குகின்றன. உண்மையில் பூமி சூரியனை சுற்றி வருகிறது. ஆனால் பூமியிலிருந்து கொண்டு சூரியனை கவனிக்கும் போது சூரியன் நகர்வதாக ஒரு காட்சிப் பிழை ஏற்படுகிறது. இதில் சூரியனானது பூமியின் முதல் பாகையிலிருந்து தொண்ணூறாவது பாகை வரை (1 Degree - 90 Degree) நகர்கிறது. அதன் பின் மீண்டும் தொண்ணூறாவது பாகையிலிருந்து முதல் பாகைக்கு நகர்கிறது. தொண்ணூற்று ஓராம் பாகைக்கோ முன்னூற்று அறுபதாம் பாகைக்கோ சூரியன் செல்லாது. ஒன்று முதல் தொண்ணூறு வரையிலான இந்த கோணத்தை தான் நாம் கிழக்கு என்கிறோம். அதே போல 91-180 தெற்கு (கடிகார சுற்றின் படி). 181-270 மேற்கு.  271-360 வடக்கு. அதனால் தான் நான்கு திசைகள். (ஒரு பேச்சுக்கு, சூரியன் அறுபது பாகைகள் மட்டுமே நர்வதாக கொண்டால் திசைகள் ஆறாகி இருக்கும்.)

இதை நாம் மிக எளிதாகவே உணர முடியும். இன்று காலை சூரிய உதயம், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து, எங்கு நிகழ்கிறது என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் - இரண்டு மாதங்கள் கழித்து சூரிய உதயம் எங்கு நிகழ்கிறது என்பதை கவனியுங்கள். நிச்சயம் சூரியன் கிழக்கிலேயே இடம் மாறி தான் உதிக்கும்.

சூரியன் வளர்வதோ தேய்வதோ இல்லை என்றாலும், ஒரு புரிதலுக்காக மட்டும் இதை நாம் சந்திரனின் வளர்த்தல் தேய்தலோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

சூரியனின் ஒன்று முதல் தொண்ணூறாம் பாகை பயணம் - உத்தராயணம் - தை ஒன்றான இன்று தான் தொடங்குகிறது. அதனால் தான் இந்த நாளை விமரிசையாக உலகை வாழ வைக்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லும் நாளாக கொண்டாடுகிறோம்.

இன்று முதல் ஆனி மாத இறுதி வரையிலும் (ஆறு மாதங்கள்), தொண்ணூறு முதல் ஒன்றாம் பாகை வரையிலான திரும்பும் பயணம் - தட்சிணாயனம் - ஆடி முதல் மார்கழி இறுதி வரையிலும் நிகழ்கிறது.

முன் காலங்களில் (பசுமை புரட்சிக்கு முன்), இரண்டு போகம் மட்டுமே விதைப்பார்கள். ஒரு நெல் ஆறு மாதம் வளரும். ஆடிப் பட்டம் தேடி விதை, மற்றும் தை பிறந்தால் வழி பிறக்கும் (அறுவடை ஆகி பணம் கையில் இருக்கும்) போன்ற பழ மொழிகளின் வழி நாம் இதை உறுதி செய்யலாம்.

உத்தராயண துவக்கத்தில், தை மாதத்தில் பொங்கல் பண்டிகை மூலம் சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி சொன்ன நாம், தட்சிணாயன துவக்கத்தில், ஆடிப் பெருக்கு பண்டிகை மூலம் நீருக்கும் பூமிக்கும் நன்றி சொல்லி இருக்கிறோம்.

ஆனால் இன்றோ, நதிகள் ஓடிய இடங்களில் மணல் லாரி ஓடுகிறது. இருக்கும் மணலும் கதற கதற கடத்தப் படுகிறது. தண்ணீரால் நிரம்பி இருக்க வேண்டிய ஆறு தண்ணீர் பொட்டலத்தால் நிரம்பி இருக்கிறது. வயலில் செருப்பு போட்டு நடக்க கூடாது எனும் மரியாதை உள்ள மனிதர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அப்படிப் பட்டவர்கள் பலர் அழுது கொண்டே விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள். மண், கடவுளாக பார்க்கப் பட்ட காலம் போய் காசாக பார்க்கப் படுகிறது.

இங்கே விவசாயம் இழிந்து போனாலும், ஏதோ ஏழை நாட்டிலிருந்து உணவு தருவிக்கப் படும். அரிசி கிலோ ஆயிரம் ரூபாய் என்றாலும் நாம் வாங்கி, "பொங்கலோ பொங்கல்" என கத்தி நம் "சடங்கை" முடித்து உண்டு விட்டு, தொலைகாட்சியில் அபிமான நட்சத்திரங்களோடு அளவளாவிக் கொண்டிருப்போம்.

எனக்கு சாமியாரின் பூனை நினைவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment