Search This Blog

Friday, 20 December 2013

காதல் எழுதிய கவிதைகள்

காதல் எழுதிய கவிதைகள்

காதல் எழுதிய கவிதைகள் (அ) கவிதை எழுதிய காதல்

*

நீ இயல்பாகத்தான் பேசுகிறாய்.
எனக்குத்தான் உன்னிடம் பேசுவதே
இயல்பாகி விட்டது.

*

எல்லா மொழியிலும்
எனக்கு காதலைக் குறிக்கும் ஒரு சொல்
உனது பெயர்.

*

உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும்
நீ தன்னை ஒரு முறை சுற்றி வந்ததாய் பெருமைப்படுகிறது
சூரியன்.

*

உனது அக்கறையை அனுபவிக்கவேனும்
இன்னும் சிலநாள் நீடிக்கட்டும்
எனது காய்ச்சல்.

*

நீ பரிசளித்த விலையுயர்ந்த உடையினும்
எனக்குப் பிடித்த நிறத்துக்காக நீ செலவழித்த
மூன்று நாள் தேடலில் ஒளிந்திருக்கிறது காதல்.

*

நீ பார்த்து பார்த்து
உன்னிலும் அழகாகிறது
உன் வீட்டுக் கண்ணாடி.

*

‘பார்க்காமலே காதலிக்கிறப் பழக்கம் மீன்களுக்குண்டு’ என்கிறேன்.
‘உண்மையாகவா?’ என கண்களை உருட்டுகிறாய்.
சந்திக்காத காதல் மீன்கள் இரண்டும் ஒன்றுபோல உருள்கின்றன.

*

குளிரோ வெப்பமோ
குறைக்கிற ரகசியம் கற்றிருக்கிறது
உன் முத்தம்.

*

இசையென வழிகிறது.
வீணை நரம்புகளும் உனது விரல் நரம்புகளும்
காதலில் பதிக்கிற முத்தங்கள்.

*

எத்தனை கவிதையெழுதியென்ன?
பிடித்திருக்கிறதென நீ சொல்லப்போகிற ஒன்றிரண்டைத் தவிர
மற்றவை எல்லாம் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்

No comments:

Post a Comment